கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 24-ந்தேதி நடக்கிறது


கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 24-ந்தேதி நடக்கிறது
x

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் 24-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று வீரராகவ ராவ் தெரிவித்தார்.

சென்னை

இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 24-ந்தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story