நீ தான் ரசிகர்களின் அடுத்த கனவுக்கன்னி...! கல்லூரி மாணவிக்கு சினிமா ஆசைகாட்டி கர்ப்பமாக்கிய தயாரிப்பாளர் !
கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்தேன். அப்போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன்.
அதில் டி.என்.41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என இருந்தது. இதனையடுத்து நான் அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன்.
அதில் பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார். இதனையடுத்து நான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அவர் கூறிய விடுதிக்கு சென்றேன்.
அங்கு இருந்த கரூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அவர் அரசியல் அமைப்பு ஒன்றில் மாநில செயலாளராகவும் இருந்தார்.
பார்த்திபன் ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து நடிகை தேர்வு செய்தார். என்னை அழைத்த போது நான் உள்ளே சென்றேன். அங்கு இருந்த பார்த்திபன் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன். சுயநினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மயங்கம் தெளிந்த பின்னர் நான் இது குறித்து கேட்ட போது உனக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது. 18 வயது நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் என்னை படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இவ்வாறு ஆசை வார்த்தை கூறி அவர் என்னை பலமுறை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன்.
இது குறித்து நான் அவரிடம் தெரிவித்தேன். மேலும் உடனடியாக திருமணம் செய்யும் படி கூறினேன். அதற்கு அவர் நீ குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்தார்.
அதன் பின்னர் அவர் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி விட்டார். மேலும் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பார்த்திபன் என்னை ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மைனர் பெண் என்று தெரிந்தும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.