நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.434 கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.434 கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

சாலை மற்றும் மேம்பால திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சுமார் ரூ.434 கோடி மதிப்பிலான சாலை மற்றும் மேம்பால திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.280.73 கோடி ரூபாய் மேம்படுத்தப்பட்ட இருவழித்தட சாலை, இரண்டு வழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலை, திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ரூ.58.64 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

அதே போல் திருப்பூரில் ரூ.53.40 கோடி மதிப்பில் 4 வழித்தடத்திற்கு அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட பல்லடம்-தாராபுரம் சாலை, கோவை ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தட சாலை, சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலக கட்டடம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.


Next Story