மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணை வெளியீடு


மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணை வெளியீடு
x

கோப்புப்படம்

2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான வரி உயருகிறது.

சென்னை

போக்குவரத்தில் பல்வேறு வரி விதிப்பு முறைகளை பல்வேறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து பெறப்படும் வருமானம் குறைவாக உள்ளது. இதனால் அரசுக்கு குறைவான வருவாய்தான் கிடைக்கிறது.

எனவே மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்தது. அந்த திருத்தங்களை மேற்கொள்ள சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், " போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுவதாக தெரிவித்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

இதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி , வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது.

சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது

புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி (Life Tax), ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story