இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,600 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,600 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன
x

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,600 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,600 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வந்தார். அவர் சாமி-அம்பாள், நடராஜர், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். இதைதொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, அறநிலையதுறை ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் பக்தர்கள் நீராடும் தீர்த்த கிணறுகள், பிரகார பாதைகள், புதிய திருக்கல்யாண மண்டபம் மற்றும் பக்தர்கள் உடைமாற்றும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பக்தர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதி மற்றும் கடற்கரை சாலை அமைய உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகர சபை தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாஸ்டர் பிளான்

ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மழைக்காலங்களில் கோவிலுக்குள் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று தரிசனம் செய்வதற்கான வசதிகள் செய்யப்படும்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். கடலில் கழிவு நீர் கலப்பது நிரந்தரமாக தடுத்து நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ராமேசுவரம் கோவிலில் பெருந்திட்ட வரைவு மாஸ்டர் பிளான் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

இங்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு எந்த ஒரு குறை என்றாலும் ஆணையாளரையோ அல்லது அமைச்சரையோ தொடர்பு கொண்டு பேசலாம். கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவே மூன்றாம் பிரகாரத்தின் மேல் பகுதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய பாதை ஏற்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

ரூ.3,600 கோடி சொத்துகள் மீட்பு

ராமேசுவரம் கோவிலில் தீர்த்தங்கள் அமைந்துள்ள மண்டபத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்று ஐ.ஐ.டி. குழு அறிக்கை அனுப்பியுள்ளதுடன் தொல்லியல் துறையும் தெரிவித்துள்ளது. இந்த மண்டபத்தையும் அகற்றி புதிய மண்டபம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு இடையூறாக ராமேசுவரம் கோவிலில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்படும்.

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.3,600 கோடி இந்து சமய அறநிலையத்துறையில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. சொத்துக்கள் மீட்பு என்ற வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் இலங்கையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது அங்கு பொருளாதார நெருக்கடியாக இருப்பதால் பின்னர் இலங்கைக்கு நேரில் சென்று அந்த சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story