கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்திவைப்பு


கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்திவைப்பு
x

கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

கடலூர்

கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இது தவிர பெரியகங்கணாங்குப்பத்தில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக ஆல்பேட்டையில் இருந்த 43 வீடுகளை காலி செய்ய சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.

ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மாற்று இடம் கொடுத்து விட்டு வீடுகளை அகற்றிக்கொள்ளுமாறு கூறி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடமும், இது தொடர்பாக மனு அளித்தனர். அப்போது 43 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார்.

பெட்டி, படுக்கைகளுடன்...

இருப்பினும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் தங்கள் பகுதியில் ஆடு, மாடுகள், பாய், சமையல் பாத்திரங்கள், அடுப்புகள், துணிமணிகள் என பெட்டி, படுக்கைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர்.

பரபரப்பு

இது பற்றி அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மற்றும் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடலூர் கோட்டாட்சியர் அதியமான்கவியரசு தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கியதற்கான உத்தரவு கடிதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை கேட்ட அவர், இது பற்றி 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்ற அவர்கள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story