ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்காததை கண்டித்து - ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்


ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்காததை கண்டித்து - ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்
x

திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் நுழைய அனுமதிக்காததை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் திருவள்ளூர் பஸ் நிலையம் வரை 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வரும் ஆட்டோக்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இதை தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையம் வரை ஆட்டோக்களை செல்ல அனுமதிக்காமல் சற்று தொலைவில் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து நேற்று திரளான ஆட்டோ டிரைவர்கள் தங்களை ரெயில் நிலையம் அருகில் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோக்களை ரெயில் நிலையத்தின் அருகே ஆங்காங்கே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சற்குணம், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் ஆட்டோக்களை நிறுத்தி பாதுகாப்பான முறையில் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.


Next Story