வருவாய்த்துறை அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டம்
கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடியது.
ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட 3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது. அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின் பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாாிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி புறக்கணிப்பு
அதன்படி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக அறை முன்பு கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் அவர்கள், தனி தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அந்த உத்தரவை உடனே ரத்து செய்யக்கோரியும் தங்களது பணியை மேற்கொள்ளாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் 80 சதவீத அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பம் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதன் காரணமாக தாலுகா அலுவலகம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சங்கராபுரம்
இதேபோல் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வட்டத்தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜா, வினோத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் கல்யாணி, நிர்வாகிகள் திருமலை, கார்மேகம், தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது தவிர மாவட்டத்தின் பிற தாலுகா அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.