தடையை மீறி பா.ஜ.க.வினர் போராட்டம்; 20 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பா.ஜ.க.பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியலின சமுதாய மக்களின் நலனுக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடியை திருப்பி அனுப்பியது மற்றும் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினா். மேலும் தி.மு.க. அரசுக்கு அனுப்பும் வகையில் உண்டியல் வைத்து அதில் காசு, பணம் போட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் பாண்டியராஜன், காபாகாந்தி, ராமமூர்த்தி, மூர்த்தி, பிரபாரி, வேல்முருகன், ஏழுமலை, ஹரி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.