அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்


அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்காததால் ஆத்திரம் அடைந்து அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்காததால் ஆத்திரம் அடைந்து அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பஸ்கள்

பொள்ளாச்சி அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர்பாளையம், வரப்பாளைம் ஆகிய பகுதிகளுக்கு சூலூரில் இருந்து 105-சி, 105-ஏ ஆகிய எண் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பல்லடத்தில் இருந்து ஜல்லிபட்டி வரை 6-ம் எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களை நம்பி பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பலரும் உள்ளனர். ஆனால் அவை முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் குறித்த நேரத்திலும் இயக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

அதாவது மேற்கண்ட 3 அரசு பஸ்களும், கொரோனா பரவல் காலத்தில் இருந்தே சரிவர இயக்கப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக்கழக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நல்லூர்பாளையம் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு வந்த 105-சி, 105-ஏ ஆகிய எண் கொண்ட அரசு பஸ்களை காலை 10 மணியளவில் சிறைபிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதை அறிந்ததும் சூலூர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும், திடீர் திடீரென நிறுத்தி விடுவதால் மிகுந்த அவதி அடைகிறோம். எனவே எக்காரணம் கொண்டும் அரசு பஸ்களை நிறுத்தக்கூடாது. சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு, கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்று மதியம் 12 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story