பொள்ளாச்சியில் தொழிலாளர்களை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பொள்ளாச்சியில் தொழிலாளர்களை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தொழிலாளர்களை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.
தாக்குதல்
பொள்ளாச்சி ஆச்சிபட்டியை சேர்ந்த கலாசு (சுமை தூக்கும்) தொழிலாளி மாறன் மற்றும் அவருடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்நின்று கொண்டு இருந்தனர். அப்போது, தனியார் பஸ்டிரைவர், கண்டக்டர் இவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கலாசு தொழிலாளர்களும், தேங்காய் உரிக்கும் தொழிலாளி கருப்புசாமி என்பவரும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர். இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கபட்டவர்கள் தங்களை தாக்கியவர்கள் மீது கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. போலீசாரின் இந்த செயலை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட கலாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட சிலர் கோவை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்ய வேண்டும்
பின்னர் போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்ற போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, கலாசு தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்திய தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபட்டு அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியும், பொதுமக்களை மிகவும் கேவலமாகவும் நடத்தி வருகின்றனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.