சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்காவிட்டால் போராட்டம்
வெள்ளியணை அருகே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
சேதமடைந்த குடிநீர் ெதாட்டி
கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தகவுண்டனூரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அதே பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த தொட்டியில் இன்று வரை நீர் நிரப்பப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டி தொடர் பராமரிப்பு இல்லாமல் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களின் அடிப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டியின் முழு கொள்ளளவுக்கு நீர் நிரப்பப்பட்டு இருக்கும்போது, அதன் சுமை தாங்காமல் தூண்கள் உடைந்து போகும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தொட்டி கீழே விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
போராட்டம் நடத்த முடிவு
குடிநீர் தொட்டி கீழே விழுந்தால் வீடுகள், அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் அங்கு விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே இந்த குடிநீர் தொட்டியின் வலுவை ஆராய்ந்து சீரமைத்துத் தரவேண்டும் அல்லது அதனை இடித்துவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டோ அல்லது சாலை மறியல் செய்தோ போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.