நாளை மறுதினம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


நாளை மறுதினம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
x

கோப்புப்படம்

நாளை மறுதினம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வருகிற 24-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

இதுதவிர, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கும் 22-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி மாலை 5 மணி வரையிலும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் எழுதிய தேர்வு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story