கரூரில் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பாதிப்பு


கரூரில் தெருநாய் தொல்லையால்  பொதுமக்கள் பாதிப்பு
x

கரூரில் ஆனால் தெருநாய் தொல்லையால் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்

நாய்களின் ராஜ்ஜியம்

தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு தெருவிலும் நாய்களின் ராஜ்ஜியம் நடக்கிறது. சில தெருக்களில் சிங்கங்கள் போல கர்ஜித்து கொண்டிருக்கும். சாதாரண நாய் எது? வெறிநாய் எதவென்று கணிக்க முடியாதபடி இருக்கும். நாம் அதை சீண்டாத வரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம் நாய்கடிக்கு மருந்து உள்ளது என்றாலும் தீவிரமாக ஒரு வெறிநாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 60,000 பேர் வெறிநாய்கள் கடித்து இறந்து விடுகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர், அதில் 50 சதவீதத்தினர் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான்.

தடுப்பூசி ேபாதுமானது

நாய் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். கடுமையான நாய்கடியால் ரேபிஸ் என்ற வைரஸ் மனித உடம்பில் தாக்கும். ரேபிஸ் என்பது மூளையை தாக்கும் ஒரு நோயாகும். முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள் பிறகு நரம்பு செல்களை வேகமாக தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். இரண்டு முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம்.

நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள் கால்நடை மருத்துவர்கள் போடும் 3 ஊசிகள் மட்டும் போதுமானது. விலங்கு கடித்த பின் 5 சதவீதம் கண்டிப்பாக போட வேண்டும். வெறும் தோலை கடித்திருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்.

ெதருநாய் ெதால்லை

நாய் ஒருவரை கடித்தவுடன் அரசு மருத்துவமனைக்கு உடனடியாகச் சென்று முதலுதவி செய்துகொள்ள வேண்டும். அல்லது நாய்க்கடியின் விஷத்தன்மை நமது உடலில் மேலும் பரவாமல் இருக்க உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கடித்த நாய் வீட்டு நாயா? அல்லது தெரு நாயா? அல்லது வெறி நாயா? என மருத்துவரிடம் தெரிவித்து விட்டால் அதற்கு தகுந்த ஊசி மற்றும் மருந்துகளை வழங்குவார்கள். மேலும் கடந்த சில மாதங்களாகவே வெறிநாய்கள் கரூர் மாவட்டத்தின் பல தெருக்களில் நடமாடுவது அதிகமாகியுள்ளது. இந்த வெறிநாய்கள் சிலரை குரைத்துக் கொண்டே ஓடி கடித்துக் குதறுகின்றன. இதனால் பொதுமக்கள் ,சிறுவர்கள் மற்றும் பெண்கள் ரோட்டில் நிம்மதியாக நடமாடமுடியவில்லை. இதனை மாநகராட்சி ஊழியர்களும் அறிந்து கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் சில சமயங்களில் வெறிநாய்களின் கடிக்கு சிலர் தப்புவதில்லை. அப்படி நாய்கள் கடித்தால் உடனடியாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதேபோல மாவட்டத்திலும் ஆங்காங்கே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதில் சில இடங்களில் பொதுமக்கள் சிலரை கடித்துள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிய கால இடைவெளியில் ஊசி செலுத்தியும், மாத்திரைகள் சாப்பிட்டும் வருகின்றனர். இதற்கிடையில் நாய்கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறப்பட்டது.

மருந்து தட்டுப்பாடில்லை

இதுகுறித்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சீனிவாசன் கூறும்போது, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாய் கடிக்கு மருந்துகள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மேற்படி சிகிச்சைக்கு மருந்துகளும் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நாடி வந்தார். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், உதவி மருத்துவர்களும் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து சிகிச்சை செய்து நேற்று மாலையே வீடு திரும்ப வைத்துவிட்டனர். எனவே வெறிநாய் கடித்த உடனே சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனையை நாட வேண்டும். நாய் கடித்து இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நாய்க்கடிக்கு தகுந்தபடி இங்கு மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை செய்கிறார்கள். எனவே இதைப்பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். என்றார்.

கரூர் ஆரம்ப சுகாதாரநிலையம் டி.டி.ஹெல்த் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் மொத்தம் 37 ஆரம்ப சுகாதாரநிலையங்களும், 7 அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. மேற்படி அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் நாய்க்கடிக்கு மருந்துகள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மேற்படி சிகிச்சைக்கு மருந்துகளும் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு முதலில் முதலுதவி செய்யப்படுகிறது. பின்னர் நாய்க்கடிக்கு தகுந்தபடி தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. என்றார்.

வீட்டு நாயுடன் விளையாடக்கூடாது

நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்ற தாந்தோணிமலையைசேர்ந்த சரவணன் கூறுகையில், ''நான் இரவு நேரத்தில் நடந்து செல்லும்போது தெரு நாய் எனது காலில் கடித்து விட்டது. எனது காலில் லேசாக காயம் ஏற்பட்டதால் அதில் லேசான வலியை உணர்ந்தேன். உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுதான் முதலுதவி சிகிச்சை செய்துகொண்டேன். பின்னர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டேன்.மொத்தம் 3 ஊசிகளை செலுத்தி உள்ளேன். தற்போது நான் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளேன். நாய்க்கடிக்கு ஊசி செலுத்தப்படுகிறவர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே நாளில் வர வைத்து ஊசி செலுத்துகின்றனர்''என்றார்.

நாய்க்கடிக்கு ஆளான வெங்கமேட்டை சேர்ந்த கனகராஜ் கூறுகையில், ''வீட்டில் வளர்க்கும் நாய்களிடம் மட்டும் விளையாடவே கூடாது. ஏனென்றால் அந்த நாய் எப்போது பாசமாக இருக்கும், எப்போது வெறியேறி கடிக்கும் என நாம் கணிக்க முடியாது. நான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடும்போது அது என்னை கடித்து விட்டது. இதனால் வலியால் துடித்தேன். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு அதற்கான மாத்திரைகளையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். நான் தற்போது நலமுடன் உள்ளேன்''. என்றார்.


Next Story