புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை


புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
x

கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

இரட்டை வாய்க்கால

கரூரில் இரட்டை வாய்க்கால் ஆண்டாங்கோவில் பகுதியில் இருந்து தொடங்கி சின்னாண்டாங்கோவில், படித்துறை, மக்கள் பாதை வழியாக ஜவகர்பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பகுதி வழியாக அரசு காலனி வரை செல்கிறது. இந்த இரட்டை வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாசன வாய்க்காலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வாய்க்கால் நீரினை கொண் விவசாயமும் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாளடைவில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், வயல் வெளிகள் குடியிருப்புகளாக மாறியதன் விளைவாகவும் வாய்க்காலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் குடியிருப்பு பகுதிகளாக மாறிப்போனது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இரட்டை வாய்க்காலில் அப்படியே வெளியேறி வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வாய்க்கால் கழிவுநீர் ஓடையாக மாறியது.

புதர்மண்டி கிடக்கிறது

இந்நிலையில் அவ்வப்போது இரட்டை வாய்க்கால் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டாலும் மீண்டும் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும் தற்போது சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிகளில் கோரைப்புற்கள் உள்ளிட்ட செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிகள் தெரியாத அளவிற்கு செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.

மேலும் குப்பை மேடாகவும் மாறி வருகிறது. வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல், கழிவுநீர் தேங்கி புதர்மண்டி கிடக்கிறது. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சின்னாண்டாங்கோவில் பகுதி இரட்டை வாய்க்கால் பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் குப்பைகள் கொட்டாமலும், கோரைபுற்கள் வளர்ந்து புதர்மண்டி ஆகாமலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

குப்பை மேடாக மாறியது

ராஜு:- கூறும்போது, முந்தைய காலங்களில் இந்த வாய்க்கால் பாசன வாய்க்காலாக இருந்தது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்றன. காலப்போக்கில் இந்த வாய்க்காலின் பயன்பாடு குறைந்து தற்போது குப்பை மேடாகவும், புதர்மண்டி கிடக்கும் வாய்க்காலாகவும் காட்சி அளிக்கிறது. சின்னாண்டாங்கோவில் பகுதியில் வாய்க்காலை தெரியாத அளவிற்கு புற்கள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சுத்தம் செய்து தர வேண்டும்.

தூய்மைப்படுத்தினால் நன்று

சுமதி:- சின்னாண்டாங்கோவில் பகுதி வழியாக செல்லும் இந்த வாய்க்காலில் முன்பு தண்ணீர் சென்றது. அந்த தண்ணீரை பயன்படுத்தும் வகையில் இருந்தது. பின்பு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. தற்போது இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டு வருகின்றன. மேலும் கோரைபுற்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. வீட்டின் அருகில் இந்த வாய்க்கால் இருப்பதால் இந்த புதர்மண்டி கிடக்கும் வாய்க்காலில் இருந்து விஷ ஜந்துகள் வருகின்றன. இதனால் வாய்க்காலை தூய்மைப்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கொசுக்கள் தொல்லை

பாப்பாத்தி:- ஏற்கனவே வாய்க்காலில் புதர்மண்டி கிடந்தது. அப்போது வாய்க்கால் முழுவதும் சுத்தம் செய்தனர். பின்னர் மீண்டும் இந்த வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் இந்த வாய்க்காலை சுத்தம் செய்து மீண்டும் செடி, கொடிகள் வளராமலும், குப்பைகள் கழிவுகள் ஆகியவற்றை வாய்க்காலில் கொட்டப்படாலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story