கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
100 நாள் வேலைதிட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் த
தர்ணா
வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மதுரை வீரன் நகர் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 48 பேருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை கொடுக்கவில்லை எனவும், 100 நாள் வேலை திட்ட அட்டையை வாங்கி கொண்டு திரும்ப வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துச்செல்வன் தலைமையில் முத்துவீரன் நகர் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அனுமதியில்லாமல் தர்ணாவில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அனைவருக்கும் 100 நாள் வேலை திட்ட அட்டை உடனடியாக திரும்பி வழங்கப்படும். அவர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 100 நாள் வேலையில் பணி வழங்காவிட்டால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.