கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 6:46 PM GMT)

மாற்று இடம் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம் காலனியில் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டபோது பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 9-ந்தேதி அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 பேரின் வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும் அங்கு பட்டா இடத்தில் வீடு கட்டியிருந்த 3 பேர் தங்களது வீட்டின் முன்பக்கம் சிறிதளவு அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படுகிறது.

அதனை அகற்றும்போது பட்டா இடத்தில் கட்டியிருந்த வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பட்டா இடத்தில் இருந்த வீட்டை இடித்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரி அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் வழங்கினர். அதனை பெற்ற அவர், கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story