விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்


விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைத்து வழிபாடு செய்ய ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைத்து வழிபாடு செய்ய ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

சிலைகள் வாங்கி சென்ற பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வழிபாடு செய்ய விநாயகர் சிலைகளை விழா குழுவினர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.1,500 வரையும், பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் சிலையின் உயரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டது.

மேலும் விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்ய பூ, வாழை மர தோரணங்கள், அருகம்புல் மாலை, பொறி, சோள தட்டைகள், சிலைகளுக்கு குடை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பூக்களின் விலை அதிகரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பத்தூர் பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை ரூ.700-க்கும், முல்லை ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், பட்டன்ரோஸ் ரூ.160-க்கும், சாமந்தி ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

சில்லறை விற்பனை கடைகளில் பூக்களின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

மேலும் மற்ற நாட்களை விட இன்று பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் கடைகளில் அலைமோதியது. இதனால் பஜார் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த பாதுகாப்பு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 74 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள், பல்வேறு விழாக்குழுவினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாட மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Related Tags :
Next Story