மறைமலைநகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்


மறைமலைநகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
x

மறைமலைநகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் நின்னகரை ராஜீவ்காந்தி நகர், வில்லியர் காலனி, கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் 457 குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் அந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். இதற்கிடையே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் மறைமலைநகர் நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுத்த பிறகு வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களிடம் கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வாகனமும் இதில் சிக்கியது. அவர் தனது வாகனத்தில் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காரில் இருந்து இறங்கி சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், உங்கள் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுகிறேன், மேலும் இதுபற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story