திருவள்ளூர் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே திடீர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். அதன் பிறகு மாலை 5 மணிக்கு வழக்கம் போல் மின்சாரம் விநியோகிக்கப்படும்.
ஆனால் தொழுவூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 10 மணி வரை விநியோகிக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில்கள் தராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சி.டி.எச்.சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் சாலையின் இரு புறங்களிலும் சென்ற ஆட்டோ, கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் அப்பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் டவுன், காக்களூர், ஜே.என்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.