தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
சாலையை சீரமைக்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில் அருகே குளத்துகுக்குடியிருப்பு- பெருநாவலூர் 4 கிலோ மீட்டர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், வளத்தகாடு, தனியனேந்தல், கல்லுபறிச்சி ெபாதுமக்கள் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா துணை தலைவர் சுப்பிரமணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் மார்ட்டின்லூதர் கிங், அறந்தாங்கி உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை (கிராம சாலைகள் நபார்டு) கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீனிவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் நபார்டு திட்டத்தில் ஜனவரி மாதத்திற்குள் வேலை நடைபெறும் என்று உதவி கோட்ட பொறியாளர் கூறினார். அப்போது குளத்துக்குடியிருப்பில் இருந்து அனைக்கட்டு வரை செல்லும் சாலையை தற்காலிகமாக செப்பனிட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு ஆணையர் ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.