பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்


பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
x

பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த அதிகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 65 குடும்பங்கள் 13 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் இதற்கு முன்னர் ஆவடி எச்.வி.எப் சாலையில் சாலையோரம் வசித்து வந்தனர். பின்னர் அந்த இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்காக அங்கிருந்த மக்களை தற்போது குடியிருக்கும் அதிகத்தூர் பகுதியில் 2010-ம் ஆண்டு அரசு சார்பில் இடம் ஒதுக்கி குடியமத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அந்த பகுதியில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் குடியிருக்கும் இடம் மேய்க்கால் புறம்போக்கு என்பதால் மாற்று இடம் தரப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கடந்த 13 ஆண்டுகளாக தாங்கள் இங்கு குடும்பமாக வசித்து வருவதாகவும், நாங்கள் கடன்கள் வாங்கி வீடுகளை கட்டிவுள்ளதாகவும் தற்போது மாற்றிடம் கொடுத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.டி.எச் சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து மாவட்ட கலெக்டரை சந்தித்து தாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க கோரிக்கையை வைத்தனர்.

கோரிக்கையை பெற்று கொண்ட கலெக்டர் அரசாங்கத்திற்கு தங்களது கோரிக்கையை பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story