சீராக குடிநீர் வழங்க கோரிபஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஏரியூர் அருகே சீராக குடிநீர் வழங்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர்
குடிநீர் தட்டுப்பாடு
ஏரியூர் அருகே உள்ள நாகமரையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறைந்த அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே கடந்த 15 நாட்களாக அந்த கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஒரு மாதத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.