பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

தாளூர்-சுல்த்தான்பத்தேரி இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்
தாளூர்-சுல்த்தான்பத்தேரி இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலை
பந்தலூர் அருகே தாளூர் தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் கேரள வயநாடு மாவட்ட சுல்த்தான்பத்தேரி பகுதி உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே தாளூர்-சுல்த்தான்பத்தேரி சாலையில் சரக்கு வாகனங்கள், அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே தாளூர் முதல் சுல்த்தான்பத்தேரி அருகே மலங்கரை பகுதி வரை 8½ கி.மீ. தூரம் வரை சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.
இதனால் வாகனங்கள் குழிக்குள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. சில நேரங்களில் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து கேரள மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலைைய சீரமைக்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மறியல் போராட்டம்
பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் 2 ஆண்டுகளாக சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அந்த பணி திடீரென நிறுத்தப்பட்டது. அந்த ஒப்பந்ததாரருக்கு மற்றொரு பணி வழங்கப்பட்டதால், சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் பணி முழுமை பெறாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்கு நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி பந்தலூர் தாலுகா தாளூர் அருகே கோழியாடியில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உண்ணாவிரத போராட்டத்தின் நடுவே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது உண்ணாவிரதம் இருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தாளூர்-சுல்த்தான்பத்தேரி சாலையை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






