பொதுமக்கள், போராட்டத்துக்கு ஒத்துழைத்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்
நாகை-திருவாரூர் மாவட்டங்களில் 28-ந்தேதி நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை-திருவாரூர் மாவட்டங்களில் 28-ந்தேதி நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரெயில் மறியல்
டெல்டா கிழக்கு பகுதியான திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு உரிய ரெயில் சேவை வழங்கிடாமலும், தொடர்ந்து வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் தென்னக ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 28-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்திட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், வர்த்தக சங்கங்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டத்தை செல்வராஜ் எம்.பி. ஒருங்கிணைத்து வருகிறார்.
பேட்டி
இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர்-நாகை ரெயில் பாதை என்பது மிகவும் பழமை வாய்ந்தது. இந்த பாதையில் போட்மெயில், நாகூர் ஆண்டவர், கம்பன் போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும், திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் காலபோக்கில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டு விட்டது. எத்தனையோ வளர்ச்சி பணிகளையும், புதிய ரெயில் பாதைகளையும் அமைக்கும் ரெயில்வே துறை ஏனோ டெல்டா கிழக்கு பகுதியை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.
இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றாமல் இருப்பது ஏனோ பல்வேறு சந்தேக கேள்விகள் மனதில் எழுகிறது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவே 28-ந்தேதி நடக்கும் இந்த ரெயில் மறியல் போராட்டம் என்பது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் அல்ல. மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் ஏற்பட்ட தன்னெழுச்சிமிகு போராட்டமாகும். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.இந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஆதரவை அளிப்பதுடன், அன்றைய தினம் எந்தவித அவசர தேவையாக இருந்தாலும் ரெயில் பயணத்தை தவிர்த்திட வேண்டும் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செல்வராஜ் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி மாசிலாமணி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.