இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை


இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
x

மூங்கில்துறைப்பட்டில் மின்தடையை கண்டித்து இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை மூங்கில்துறைப்பட்டில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மூங்கில்துறைப்பட்டு பகுதியில் எந்த ஒரு முன்அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது. பகலில்தான் மின்சாரம் இல்லை என்றால், இரவு நேரங்களிலும் கூட மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கி விடுகின்றன. விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மாணவர்கள் படிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். வீடுகளில் சமையல் உள்ளிட்ட எந்த வேலைகளையும் செய்ய முடியவில்லை. எனவே மக்களின் மன வேதனையை உணர்ந்து தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story