புதுக்கோட்டை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு


புதுக்கோட்டை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
x

புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை,

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர்களில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பெங்களூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, வேளாண்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்லாக்கோட்டை, கரம்பக்குடி ஆகிய பகுதிகளிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.



Next Story