புதுக்கோட்டை மருத்துவ இணை இயக்குனர் பணியிடை நீக்கம்


புதுக்கோட்டை மருத்துவ இணை இயக்குனர் பணியிடை நீக்கம்
x

புதுக்கோட்டையில் மனநல காப்பகம் முறையாக செயல்படாததை ஆய்வின் போது கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ இணை இயக்குனரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

புதுக்கோட்டை

அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வந்தார். அவர் அன்னவாசலில் அரசு மருத்துவமனை, தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் மனநல காப்பகம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தையும் பார்வையிட்டார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் மனநல காப்பகத்தில் 4 சிறிய அறைகளில் 59 பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற சூழலும், சரியான உணவு வழங்காத நிலையும், அவர்களுக்கு படுக்கைகள் கட்டில் போன்ற வசதிகள் இல்லாமல் தரையில் படுத்து தூங்கும் அவல நிலையும் இருக்கிறது. ஒரு அறையில் 15 பேர் 20 பேர் அடைத்து வகை்கப்பட்டுள்ளனர். இதனை பாா்த்தது பெரிய அளவில் அதிர்ச்சியாக இருந்தது.

தொண்டு நிறுவன ஆர்டர் ரத்து

மனநிலையில் திருந்தியவர்கள் கூட ஓரிருவர்கள் உள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் தந்தால் வெளியே அனுப்பலாம். ஆனால் எந்தவித முயற்சியும் தொண்டு நிறுவனம் எடுக்கவில்லை. உடனடியாக தொண்டு நிறுவனத்தின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் ரத்து செய்யப்படுகிறது. தனியார் நடத்தினால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இணை இயக்குனர் அதனை கண்காணிக்கவில்லை.

பணியிடை நீக்கம்

அரசின் கவனத்திற்கு இது போன்று தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அவலங்கள் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் யாருடைய கவனத்திற்கும் அது வராத நிலையில் மருத்துவ பணிகள இணை இயக்குனர் ராமுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை காலை (அதாவது இன்று) 59 பெண்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்ய உள்ளனர்.

மருந்தாளுனர் பணியிடங்கள்

983 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே சிலர் நீதிமன்றத்திற்கும் சென்று உள்ளனர். இது சம்பந்தமாக விவரங்களை கேட்டு பெற்று அதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story