சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு


சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
x

சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

சென்னை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 530 எம்.எல்.டி. (மில்லியன் லிட்டர்) குடிநீர் வழங்கிடும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 265 எம்.எல்.டி மட்டுமே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கூடுதலாக 265 எம்.எல்.டி அளவு குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.44.33 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இதில் ஒரு பகுதியாக பூந்தமல்லி புறவழி சாலையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே 20 அடி ஆழத்தில் 3 ஆயிரம் மில்லி மீட்டர் விட்டம் கொண்ட கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலைக்கு எந்தவிதமான சேதமும் இல்லாமல் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பின்னர் 2 ஆயிரம் மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் இதனுள் பதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் இந்த இரும்பு குழாய்கள் 120 மீட்டர் நீளத்திற்கு பதிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 75 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவிற்குள் இப்பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர்.

கோயம்பேடு வரையிலான குழாய் பதிக்கும் பணிகள் தொய்வின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் நிறைவுற்ற பின்னர் கூடுதலாக நாளொன்றுக்கு 265 எம்.எல்.டி அளவு குடிநீர் வழங்கப்படுவதால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 265 எம்.எல்.டி அளவு குடிநீரும் சேர்த்து நாளொன்றுக்கு 530 எம்.எல்.டி குடிநீர் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் வழங்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

இந்த நிலையில் பூந்தமல்லி புறவழி சாலையில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். கிரேன் வழியாக உள்ளே இந்த பணியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி நடைபெறவில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ.7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடைந்தவுடன் சென்னைக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

15 லட்சம் குடும்பங்களுக்கு...

சென்னை குடிநீர் வாரியம் மூலம் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்' என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, இயக்குனர் சாமி லால் ஜான்சன், தலைமை என்ஜினீயர் ஜெயகர் ஜேசுதாஸ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story