காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2024 9:44 AM IST (Updated: 2 March 2024 10:31 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த மாணவியிடம் உனது வீட்டில் இருந்து பணம் எடுத்து வருமாறும், செல்போன் மூலம் பணத்தை அனுப்புமாறும் அசாருதீன் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி, அசாருதீனுடன் பழகுவதை தவிர்த்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்து உள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து உள்ளார். எனவே அந்த மாணவியிடம், தன்னை காதலிக்க வில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக அசாருதீன் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதற்கு அவருடைய நண்பர் ஆகாஷ் (21) என்பவரும் உடந்தையாக இருந்து உள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அசாருதீன், ஆகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story