உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை
x

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சிறுவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கவிதா (வயது 32). இவருடைய கணவர் ரசூல். இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரசூல், கவிதாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

கவிதா, தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கவிதா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் கவிதாவுக்கு, செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. ராஜேஷ் அடிக்கடி கவிதா வீட்டுக்கு வந்து தங்கி அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். கவிதாவுடன் அடிக்கடி செல்போனிலும் பேசி வந்தார்.

இதற்கிடையில் மகன்கள் இருவரும் பெரியவர்களாகி விட்டதால் ராஜேஷ் வீட்டுக்கு வருவதை கவிதா விரும்பவில்லை. அவருடனான கள்ளக்காதலை கைவிட முடிவு செய்த கவிதா, கள்ளக்காதலனுடன் பேசுவதை தவிர்த்தார். அத்துடன் ராஜேஷ் உல்லாசத்துக்கு அழைக்கும்போது அதற்கும் மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக உள்ள அவரது 2 மகன்களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலி கவிதா வீட்டுக்கு சென்றார். கவிதா வேலைக்கு சென்று விட்டதால் அவரது 2 மகன்கள் மட்டும் வீட்டில் இருந்தனர்.பின்னர் ராஜேஷ் தான் வைத்து இருந்த குளிர்பானத்தில் விஷத்தை கலந்து, அதனை கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்தார். விஷம் கலந்து இருப்பது தெரியாமல் சிறுவர்கள் இருவரும் அதை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர்.

வீட்டுக்குள் ராஜேஷ் மற்றும் கவிதாவின் மகன்கள் என 3 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரையும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார். கவிதாவின் 2 மகன்களும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story