மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம்:பொங்கலன்று வாலிபர் அடித்துக்கொலைசேலத்தில் பயங்கரம்


மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம்:பொங்கலன்று வாலிபர் அடித்துக்கொலைசேலத்தில் பயங்கரம்
x

மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், வடமாநில வாலிபரை அடித்துக் கொன்றனர். பொங்கலன்று சேலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

சேலம்

அன்னதானப்பட்டி,

வடமாநில வாலிபர்

சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 36). இவர் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சகானி மகன் குருசரண் சகானி (32) என்பவர் வேலை செய்து வந்தார்.

குருசரண் சகானி, அவருடன் வேலை செய்யும் அனில் (30), ராகேஷ் (32), அஜய் (29), ஆலோ (28) ஆகியோர் பொங்கலன்று மாலை 3.30 மணி அளவில் தாதகாப்பட்டி கேட் மகா காளியம்மன் கோவில் அருகில் நடந்து சென்றனர்.

வழிவிடாததால் தகராறு

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூணாங்கரடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (25), கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (22) ஆகிய இருவரும் வந்தனர். அவர்கள் சாலையில் நடந்து சென்றவர்களை பார்த்தவுடன் 'ஹாரன்' அடித்துள்ளனர். அதற்கு அவர்கள் வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது.

அப்போது ராஜா, சீனிவாசன் ஆகியோருக்கும், குருசரண் சகானி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் குருசரண் சகானி மயங்கி விழுந்தார். உடனே ராஜாவும், சீனிவாசனும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சரண்

மயங்கி விழுந்த குருசரண் சகானியை, உடன் வந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குருசரண் சகானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தப்பி சென்ற ராஜா, சீனிவாசன் ஆகியோர் அன்னதானப்பட்டி ரூரல் கிராம நிர்வாக அதிகாரி இலங்கேஸ்வரன் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். அவர், இருவரையும் அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

வாக்குமூலம்

அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர். ராஜா, சீனிவாசன் இருவரும் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மூணாங்கரடு பகுதியில் சென்றோம். அப்போது குருசரண் சகானி, அவருடைய நண்பர்கள் எங்களுக்கு வழிவிடாமல் சாலையில் நடந்து சென்றனர். நாங்கள் 'ஹாரன்' அடித்தும் அவர்கள் சாலையை விட்டு ஒதுங்கவில்லை. தொடர்ந்து நாங்கள் 'ஹாரன்' அடித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டோம். நாங்கள் தாக்கியதில் குருசரண் சகானி, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். தற்போதுதான் அவர் இறந்தது எங்களுக்கு தெரிய வந்தது.

இவ்வாறு அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Related Tags :
Next Story