கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு
பெரியகுளம், உத்தமபாளையத்தில் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, நேற்று பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியகுளம் தென்கரை காளஹதீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, ராகு, கேது பகவானுக்கு பல்வேறு திருமஞ்சன பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.உத்தமபாளையம் திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் ராகு-கேதுவுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு நேற்று பகல் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து ராகு சிம்கைதேவிக்கும், கேது சித்திரலோக தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. சிவாச்சாரியார் மணி வாசகம் தாலி கயிற்றை அணிவித்தார். இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.