ராகுல்காந்தி தகுதிநீக்கம் நியாயமற்றது - சரத்குமார் அறிக்கை


ராகுல்காந்தி தகுதிநீக்கம் நியாயமற்றது - சரத்குமார் அறிக்கை
x

கோப்புப்படம்

ராகுல்காந்தி தகுதிநீக்கம் நியாயமற்றது என்று மத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்ததில், குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால், காலஅவகாசம் கொடுக்காமல் உடனடியாக தகுதிநீக்கம் செய்தது ஏன்? என்று புரியவில்லை. இது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம்கோரும்போது, நாடாளுமன்றம் உரிய கால அவகாசம் வழங்காமல், உடனடியாக தகுதிநீக்கம் செய்தது, அவர்களின் ஜனநாயக கடமை ஆற்றுவதை தடைசெய்வதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story