ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்


ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்
x

ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார் என கே.எஸ். அழகிரி நம்பிக்கை தெரிவித்தார்.

விருதுநகர்

சிவகாசியில் விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-காங்கிரஸ் கட்சிக்கு 136 ஆண்டு கால வரலாறு உள்ளது. உலகிலேயே மிக நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டவர் ராகுல்காந்தி. அவர் நடை பயணத்தின்போது தனக்கே பல கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டார். விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் ராகுல்காந்தி செயலில் காட்டினார்.ஒரு கட்சியின் ஆணி வேர் கிளைகழக நிர்வாகிகள் தான். அசாமில் பூத் கமிட்டி அமைத்து ஒரு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதன் பின்னர் இந்திராகாந்தி இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க உத்தரவிட்டார். ஒவ்வொரு தொகுதியிலும் 100 சதவீதம் பூத்கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது தான். இதில் நீங்கள் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி நிச்சயம் பிரதமராவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக வாக்கு பதிவாகி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.இந்த தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், ஆர்.எஸ்.எஸ்.க் கும் நடக்கும் தேர்தல். காந்தியின் பேரன்களுக்கும், கோட்சோவின் பேரன்களுக்கும் நடக்கும் போர். பா.ஜ.க. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான கருத்துகணிப்பில் 70 சதவீதம் மக்கள் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரசாரம் செய்யப்பட்ட போது ராகுல்காந்தி பிரதமர் என்று கூறி பிரசாரம் செய்தோம். அதனால் தான் அதிக இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், ராதாகிருஷ்ணன், பழனிநாடார், ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் சிரஞ்சிவி, காமராஜர், ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story