இந்திய ஒற்றுமை பாதயாத்திரை - 3வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
இந்திய ஒற்றுமை பாதயாத்திரை 3-வது நாளான இன்று ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கினார்.
நாகர்கோவில்,
ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். முதலில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் மனமுருக பிரார்த்தனை செய்தார். அங்கு மரக்கன்று நட்டதோடு, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.
பின்னர் கன்னியாகுமரியில் 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் பாதயாத்திரையின் 3-வது நாளான இன்று நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் இருந்து தொடங்குகிறார். இன்று தக்கலை வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.