ரெயில்வே ஊழியர் மர்ம சாவு -போலீஸ் விசாரணை


ரெயில்வே ஊழியர் மர்ம சாவு -போலீஸ் விசாரணை
x

திருமுல்லைவாயலில் ரெயில்வே ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமுல்லைவாயல்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்தமித்ரா (வயது 40). இவர் ஆவடி அடுத்த அண்ணனுர் ரெயில்வே குடியிருப்பில் மனைவி மற்றம் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் அம்பத்தூரில் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கு சென்றார். அஸ்தமித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ரெயில்வே குடியிருப்பில் அஸ்தமித்ரா தங்கியிருந்த வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் அஸ்தமித்ரா வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கொலையா? போலீஸ் விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது அஸ்தமித்ரா வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் படுக்கையில் கவிழ்ந்த நிலையில் உடல் அழுகி அஸ்தமித்ரா இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஸ்தமித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அஸ்தமித்ராவை யாராவது கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அஸ்தமித்ரா மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story