நெல்லையில் நாளை வரை மட்டுமே மழை வெள்ள நிவாரணத்தொகை - கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு


நெல்லையில் நாளை வரை மட்டுமே மழை வெள்ள நிவாரணத்தொகை - கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
x

இன்று பிற்பகல் வரை நெல்லையில் 92% ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை 92 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை 5 மணி வரை மட்டுமே நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நடைபெறும் எனவும் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லைமாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைந்த 4 வட்டங்கள் மற்றும் 11 வருவாய் கிராமங்களுக்கு ரூ.6000 மற்றும் ஓரளவு பாதிப்படைந்த பிற அனைத்து பகுதிகளுக்கும் ரூ.1000 என சிறப்பு நிவாரண நிதி அறிவித்தார்.

இந்த நிவாரண நிதியை பெற ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு, 2.1.2024 மதியம் 2.00 மணிவரை 92 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் டோக்கன் பெறாத காரணத்தாலோ, டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாத காரணத்தாலோ, டோக்கன் தவறவிட்டதனாலோ மேற்படி நிவாரண நிதியினை இதுவரை பெறதாவர்கள், கடைசி வாய்ப்பாக 03.01.2024 அன்று நேரடியாக அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வருகை தந்து கைரேகை வைத்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண தொகை 03.01.2024 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும். மேலும், 04.01.2024 முதல் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணிகள் ரேஷன் கடைகளில் தொடங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை வர இருக்கும் காரணத்தால் அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது.

எனவே மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், இதுவரை நிவாரண நிதி பெறாமல் தவறவிட்டவர்கள் கடைசி நாளான 03.01.2024 தேதிக்குள் தவறாமல் நிவாரணத் தொகையினை பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story