சிவகங்கையில் சூறைக்காற்றுடன் மழை- வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன
சிவகங்கை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
சிவகங்கை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
சூறைக்காற்றுடன் மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. சிவகங்கை பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
அத்துடன் கண்மாய் ஊருணி போன்றவைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் சிவகங்கை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சிவகங்கை அடுத்த சாலூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு அந்த பகுதியில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
வாழை மரங்கள் சாய்ந்தன
இதுகுறித்து சாலூர் ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் கூறியதாவது:- சாலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் 13 ஏக்கரில் வாழையும், 8 ஏக்கர் கரும்பும் பயிரிட்டிருந்தனர். நேற்று மாலையில் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான வாழை மரங்கள், கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.
அது தவிர 21 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது. இதனால் கடும் அவதிக்குள்ளாகினோம்.
மழை அளவு
நேற்று காலையில் மின் துறையினர் சேதம் அடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை அமைத்தனர். சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று மாலை 5 மணி முதல் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் மாலை முதல் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகங்கை-42.40, மானாமதுரை-25, இளையான்குடி-8, திருப்புவனம்-40.30, திருப்பத்தூர்-11.40, காரைக்குடி-29, தேவகோட்டை-12.60, காளையார் கோவில்-50.20, சிங்கம்புணரி-4.40. மாவட்டத்தில் அதிகபட்சமாக காளையார் கோவிலில் 50.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக சிங்கம்புணரியில் 4.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.