'ராமர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல' - வெங்கையா நாயுடு பேட்டி


ராமர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல - வெங்கையா நாயுடு பேட்டி
x

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என வெங்கையா நாயுடு கூறினார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டதால், 500 ஆண்டு கால போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ராமர், இந்திய நாகரிகம், கலாசாரத்துக்கான நம்பிக்கை ஆவார். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர். சத்தியத்தின் வழி நின்றவர். அதனால்தான் நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அவரை வழிபடுகிறார்கள். அது மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயரிலும் ராம் என்பது உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பிரதிபலிக்கும் என நினைக்கவில்லை. இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் ராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல.

ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என மகாத்மா காந்தி சொன்னார். ராம ராஜ்ஜியத்தில் ஊழல் இல்லாத, சுரண்டல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத, சாதி மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகும். எனவே ராம ராஜ்ஜிய திசையை நோக்கித்தான் செயல்பட வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story