ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் வருகை


ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் வருகை
x

ராமஜெயம் கொலை வழக்கில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தெரிவித்தார்.

திருச்சி,

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி காலை நடை பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் உள்ள காவிரி கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை எடுத்து கொண்டு விசாரணையை தொடங்கினர். ஏற்கனவே, அவர்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.

அதைதொடர்ந்து தற்போது சந்தேகத்திற்கு இடமான வட்டத்தில் உள்ள 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த வழக்கு விசாரணை டிஜிபி ஷகில் அக்தர் திருச்சிக்கு வருதை தந்தார். அவர் முன்பு சந்தேகத்திற்கு உட்பட்ட 20 பேரும் ஆஜராக உள்ளனர்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னர்தான் முழு விபரங்களை கூறமுடியும். அதற்கு முன்பாக எதையும் கூற முடியாது. இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை தான் கூற முடியாது. ஆனால் நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த எல்லா ஏற்பாடுகளும் எங்களுக்கு செய்து தந்துள்ளனர்" என்று சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தெரிவித்தார்.


Next Story