ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையின் விவரங்கள் வெளியானது


ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையின் விவரங்கள் வெளியானது
x

கோப்புப்படம்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உள்பட 12 பேர் இருந்தனர். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயஅறிவியல்துறை அலுவலகத்தில் 12 பேருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 21-ந்தேதி வரை 4 பேர் வீதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள், 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த உண்மை கண்டறியும் சோதனை குறித்த அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது. உண்மை கண்டறியும் சோதனையில் பங்குபெற்ற 12 பேரில் 11 பேர் சோதனையின்போது பொய்யான தகவலை கூறியிருப்பது தெரிய வந்துள்ளது. திலீப் என்ற நபர் ஒருவர் மட்டுமே உண்மையை கூறியிருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story