ராமநாதபுரத்தில் கடல் பச்சை நிறமாக மாறியதால் பரபரப்பு


ராமநாதபுரத்தில் கடல் பச்சை நிறமாக மாறியதால் பரபரப்பு
x

மண்டபம் கடற்கரை பூங்காவை ஒட்டிய தென்கடல் பகுதியிலும் கடல் நீரானது பச்சை நிறமாகவே காட்சி அளித்து வருகின்றது.

ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்து கால் அருகே உள்ள சிங்கிலிதீவு முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.அதுபோல் இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் ஆமை, கடல் பசு, டால்பின், நட்சத்திரமீன்கள், பவளப்பாறைகள், கடல் குதிரை, கடல் பன்றி உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர இயற்கையாகவே கடலில் பல வகையான பாசிகளும் வளர்ந்து நிற்கின்றன.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தென்கடல் மற்றும் ரயில்வே பாலத்தை அடிப்பகுதியில் உள்ள வடக்கு கடல் பகுதியிலும் கடல் நீரானது பச்சை நிறமாகவே நேற்று முதல் காட்சியளித்து வருகின்றது. பச்சை நிறமாக காட்சியளித்து வரும் கடல் நீரை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலாப் பணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்து வருவதுடன் செல்போனிலும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதேபோல் மண்டபம் கடற்கரை பூங்காவை ஒட்டிய தென்கடல் பகுதியிலும் கடல் நீரானது பச்சை நிறமாகவே காட்சி அளித்து வருகின்றது. இதை அங்கு பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் என்று வேடிக்கை பார்த்தனர்.

இது பற்றி மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி கூறும்போது,

ஆண்டுதோறும் இந்த சீசனில் இயற்கையாகவே கடலில் பச்சை பாசிகள் படர்ந்து வருவது வழக்கம். அதுபோல் தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சை பாசிகள் படர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நல்ல தண்ணீர் அதிக அளவில் கடலில் கலந்துள்ளதால் நியூட்ரின் அதிகமாகி உள்ளது. இதனால் கடலுக்குள் இயற்கையாகவே நாட்டிலூக்கா என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பச்சை பாசி கடலில் படர்ந்துள்ளது. பாம்பன்,மண்டபம், வேதாளை, ராமநாதபுரம் அருகே பெரிய பட்டினம், முத்துப்பேட்டை என மாவட்டம் முழுவதும் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சை பாசிகள் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகவே ஆழ்கடல் பகுதியில் இருந்து வந்தது.

தற்போது அது கரையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் படர்ந்துள்ளது. பச்சை பாசிகள் அதிகம் படர்ந்துள்ள பகுதிகளில் மீன்கள் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது என்பதால் கரையோரத்தில் உள்ள பெரும்பாலான மீன்கள் ஆழ்கடல் பகுதியை நோக்கி நீந்தி இடம் பெயர்ந்து விடும். சிறிய வகையான மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை, பெரியபட்டினம் பகுதிகளில் ஒரு சில கடற்கரைப் பகுதிகளில் பச்சை பாசியால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருப்பதாக தகவலும் கிடைத்தது. இதுபோன்ற சீசனில் இந்த வகை பச்சைப்பாசிகள் கடலில் வளர்வது இயற்கையான ஒன்றுதான் இதனால் மீனவர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.

காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தானாகவே இந்த பாசிகள் கரை ஒதுங்கி அழிந்து விடும். பாக்ஜலசந்தி பகுதியிலும் ஒரு சில கடல் பகுதிகளில் பச்சை பாசிகள் படர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story