வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து


வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
x

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்ஸா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல், குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர். இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பரவும் தொற்று

ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது.

நோயாளிகள் கூட்டம்

இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் வருவதாகவும், அவர்களுக்கு அதிக இருமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் மருந்தை கொடுத்தாலே 3 முதல் 5 நாட்களில் இந்த காய்ச்சல் சரியாகிவிடும் என்றும் டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களிலும் வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது குறித்து டாக்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் வருமாறு:-

24 மணி நேரமும் சிகிச்சை

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் இருக்கை மருத்துவ அலுவலர் சரவணன்:- பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற தினமும் சுமார் 350 பேர் வருகின்றனர். காய்ச்சலின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும் 15 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அச்சப்பட வேண்டாம்

பெரம்பலூரில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாமில் சிகிச்சை அளித்த அரசு டாக்டர் சிவபாலன்:- தற்போது வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் காய்ச்சல் கொரோனா போல் கிடையாது. இதற்கு அறிகுறி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையை நாட வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏதேனும் நோய்க்கு மருந்து-மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம் ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து-மாத்திரைகளை வழங்குகியுள்ளோம். காய்ச்சல் அதிகமாக உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, அவர்களை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளோம். காய்ச்சல் இருப்பவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின் படி மருந்து-மாத்திரைகள் எடுத்து கொண்டு சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

மருத்துவ முகாம்

அரியலூர் ஒன்றியம், கரு பொய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி:- வைரஸ் காய்ச்சல் பரவுவதாக கடந்த சில நாட்களாக தகவல் வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ெபரும்பாலும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லை. இருப்பினும் கடந்த வாரம் சுகாதாரத்துறை மூலம் கடுகூர் மற்றும் கரு பொய்யூர் சுகாதார நிலையங்கள் இணைந்து மருத்துவ முகாம் நடத்தி, பள்ளியில் பயிலும் 110 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்து, தேவையான மருந்து, மாத்திரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

சளி, இருமலால் பாதிப்பு

பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த விஜேந்திரன்:- கடந்த 10 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டு வந்தேன். மருந்து கடையில் மருந்து-மாத்திரைகள் வாங்கி உட்கொண்டும் சரியாகவில்லை. இதனால் அரசு சார்பில் நடத்தப்பட்ட காய்ச்சலுக்கான சிறப்பு முகாமிற்கு சிகிச்சை பெற வந்தேன். டாக்டரும் எனது உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருந்து-மாத்திரைகள் வழங்கியுள்ளார். மேலும் எனது உயர் ரத்த அழுத்த பரிசோதனையும், உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல்...

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த இல்லத்தரசி மீனாட்சி:- எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மழை காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கிவிட்டது. ஆனாலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. நாம் எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படத்தான் செய்கிறது. தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உணவு சாப்பிடாமல், சோர்வாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே குழந்தைகளை மேலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டியதிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. மேலும் தொடர்ந்து காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தான உணவுகள்

வெண்பாவூரை சேர்ந்த விவசாயி முருகேசன்:- கடந்த சில ஆண்டுகளாக குளிர்காலத்திலும், வெயில் காலத்திலும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. கிராமப்புறங்களில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான ஊர்களில் கழிவுநீர் கால்வாய் சரியாக பராமரிக்கப்படாமல், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, அதன் மூலம் காய்ச்சல் பரவுகிறது. தற்போது துரித உணவுகளை அதிகளவு சாப்பிடும் பழக்கம் உள்ளது. சரியான உணவு பழக்கவழக்கம் இல்லாததால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்கள் ஏற்படுகிறது. நமது முன்னோர்கள் அதிக அளவில் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற சத்தான உணவு வகைகளை உட்கொண்டனர். இதனால் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அதுபோல் மீண்டும் பொதுமக்கள் பண்டைய கால உணவு முறைக்கு மாறி சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் நெல் மட்டும் பயிரிடாமல் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை போன்ற பயிர்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

தா.பழூரை சேர்ந்த இயற்கை மருத்துவர் செல்வகுமார்:- வைரஸ் காய்ச்சல் குறைந்தது 3 நாட்கள் மனிதர்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் வீரியத்தை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தவும் இயற்கை மருத்துவத்தில் பல்வேறு முறைகள் உள்ளன. அதில் முக்கியமானது கிரியா முறை ஆகும். கிரியா முறை என்பது உடலில் தேங்கியுள்ள கழிவுகளை (வைரஸ், பாக்டீரியா) இயற்கை முறையில் வெளியேற்றுவது ஆகும். உதாரணமாக மூக்கு குவளை பயன்படுத்தி மூக்கு கழுவுதல், கண் குவளை கொண்டு கண் கழுவுதல், வாமன தவத்தி எனப்படும் இறைப்பை சுத்தம் செய்தல், குடல் சுத்தம் செய்தல் போன்றவற்றை கூறலாம். மேலும் சிட்ரஸ் வகை பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்கி வைரஸ் நோய் வராமல் தடுக்கலாம். தற்போது அனைவராலும் அறியப்பட்ட நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலை கசாயம், பப்பாளி இலை சாறு ஆகியவை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகப்படுத்துகின்றன.

சுவாச பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள முடியும். உடல் வெப்பநிலையை குறைக்க காற்றோட்டமான பகுதியில் இருக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, காய்ச்சலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து இயற்கை மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டால், அதிக மருந்துகளை உட்கொள்ளாமல், செலவுகள் இல்லாமல் நிச்சயமாக காய்ச்சல் வராமல் தடுக்கவும் அல்லது காய்ச்சல் வந்தாலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அதை எதிர்கொண்டு மீள்வதற்கும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது. இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


Next Story