பல்நோக்கு மையத்தில் ரேஷன் கடை
கக்கடவில் பல்நோக்கு மையத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. ஆனால் மின் வசதி இல்லாததால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நெகமம்
கக்கடவில் பல்நோக்கு மையத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. ஆனால் மின் வசதி இல்லாததால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ரேஷன் கடை அகற்றம்
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெகமத்தை அடுத்த கக்கடவு கிராமத்தில் 1,450 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். இதில் 465 பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதற்கிடையில் அந்த பகுதியில் இருந்த ரேஷன் கடை பழுதடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் புதிய ரேஷன் கடை கட்டப்படவில்ைல.
மின்சாரம் இல்லை
இதையடுத்து அங்குள்ள பல்நோக்கு மையத்தில் வைத்து பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, பாமாயில், சர்க்கரை, மண் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அங்கு மின் இணைப்பு இல்லை. தற்போது ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை வைப்பது அவசியம். அந்த எந்திரம் இயங்க மின்சாரம் வேண்டும். இதற்காக அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து மின்சார இணைப்பை ஊழியர்கள் ஏற்படுத்தி கொள்கின்றனர்.
கோரிக்கை
எனினும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பல்நோக்கு மையத்துக்கு மின் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், புதிய ரேஷன் கடை கட்டவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.