கலெக்டர் அலுவலகத்தில் சிக்கித்தவித்த செம்பழுப்பு வால் காகம் மீட்பு


கலெக்டர் அலுவலகத்தில் சிக்கித்தவித்த செம்பழுப்பு வால் காகம் மீட்பு
x

கலெக்டர் அலுவலகத்தில் சிக்கித்தவித்த செம்பழுப்பு வால் காகம் மீட்கப்பட்டது.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் நுழைவு வாயிலின் அருகே உட்பகுதியில் செம்பழுப்பு வால் காகம் என்ற அரியவகை பறவை நேற்று காலை 9 மணி அளவில் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. மேற்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடிகளால் மூடப்பட்டு இருந்ததாலும், கீழே பொதுமக்கள் அதிகமாக இருந்ததாலும் அதனால் பறந்து வெளியே செல்ல முடியவில்லை. இதனால் அது, முதல்மாடியில் இருந்த திண்டில் தஞ்சம் புகுந்தது.

இதைப்பார்த்த கலெக்டர் மா.பிரதீப்குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, அந்த பறவையை மீட்டு வெளியே விட அதிகாரிகளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிர்வேல் தலைமையில் தீயணைப்பு படையினர் ஏணியுடன் அங்கு வந்தனர். அவர்கள் ஏணியில் ஏற முயன்றபோது, அந்த பறவை அங்கும் இங்கும் பறக்க தொடங்கியது. இதனால் அவர்களால் அதை பிடிக்க முடியவில்லை. அதற்குள் அந்த பறவை பறந்து, படிப்பகுதி வழியாக 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்த ஜன்னல் கம்பியில் தஞ்சம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அதிகாரி கதிர்வேல் அங்கு சென்று பறவையை பிடித்தார். பின்னர் அங்கிருந்த கலெக்டர் அலுவலக ஊழியர் அதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர், அதை வெளியே கொண்டு வந்து பறக்கவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story