"ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பை கைவிட வேண்டும்" - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x

ரெயில்களில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வழக்கம் போல பயணிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2 ஆகவும், முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை 3 ஆகவும் குறைக்க இந்திய தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது.

சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதன் மூலம், ஏழைகள்தொடர்வண்டிகளில் பயணிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் இப்போது சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7, ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் 6, ஏ.சி. இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, முன்பதிவு இல்லா பெட்டிகள் 5 என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்தப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்காத தொடர்வண்டி வாரியம், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை 2 ஆகவும், முன்பதிவு இல்லா பெட்டிகளை 3 ஆகவும் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகளை 10 ஆகவும், ஏ.சி. இரண்டாம் வகுப்பு பெட்டிகளை 4 ஆகவும் உயர்த்த வேண்டும்; ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி ஒன்றை அனைத்து வண்டிகளிலும் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது ஏழைகளுக்கு எதிரான செயலாகும்.

இந்திய தொடர்வண்டி வாரியத்தின் ஆணை செயல்பாட்டுக்கு வரும்போது, சாதாரண படுக்கை பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 546-லிருந்து 156 ஆக குறையும். முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியில் 100 பேர் பயணிப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு தொடர்வண்டியில் முன்பதிவு செய்யாமல் பயணிப்போர் எண்ணிக்கை 500-லிருந்து 300 ஆக குறையும். மொத்தமாக ஒரு தொடர்வண்டியில் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பு 590 ஏழைப் பயணிகளுக்கு மறுக்கப்படுகிறது.

இது மிகப்பெரிய உரிமை பறிப்பாகும். எனவே, தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். இப்போதுள்ள பெட்டிகள், இப்போதுள்ள கட்டண விகிதத்திலேயே அதிவிரைவு தொடர்வண்டிகளை இயக்கி, அவற்றில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வழக்கம் போல பயணிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story