விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி


விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி
x

விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

அரியலூர்

கார் மோதியது

அரியலூர் மாவட்டம் மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்தவா் செந்தில்குமார்(வயது 35). விவசாயி. இவரது மகன் பாலமுருகன்(7). இவர்கள் அருகில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை ஓட்டுவதற்காக தங்கள் வீட்டில் இருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக அரியலூர் நோக்கிச்சென்ற கார், அவர்கள் மீது மோதியது.

இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உடையார்பாளையம் போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று செந்தில்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், விபத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்து, கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் கூறி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆண்டிமடம் முத்துக்குமார், ஜெயங்கொண்டம் சண்முகசுந்தரம், உடையார்பாளையம் வேலுச்சாமி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிடாததால், இரண்டு புறங்களில் இருந்தும் வந்த வாகனங்கள் தடைபட்டன. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தடியடி

இதையடுத்து போலீசார், லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார், செந்தில்குமாரின் உறவினர்கள் உள்ளிட்டோரை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விபத்துக்கு காரணமான வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாகவும், விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததன்பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சூப்பிரண்டு எச்சரித்ததுடன், அவசர பணிகளுக்கு செல்பவர்கள் மறியலால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், எனவே மறியல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதையடுத்து செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story