தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x

கூட்டுறவு வங்கி கூடுதல் செயலாளர் சாவில், அவர் எழுதிய கடிதத்தை வைத்து தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி(வயது 54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிலிருந்து வங்கிக்கு சென்றவர் வங்கியின் உள்ளே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கணபதியின் வீட்டில் அவரது சட்டை பையில் ஒரு கடிதம் சிக்கியது.

கடிதம்

அந்த கடிதத்தில் கணபதி எழுதியுள்ளதாவது:- அன்புள்ள மனைவிக்கு உன் ஆசை கணவன் எழுதுவது. நான் உங்களை விட்டு பிரிகிறேன். நீ கண்டிப்பாக மனம் தளராமல் ஆண்டவன் துணையோடு பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவும். நீ எக்காரணம் கொண்டும் என் மீது சத்தியமாக நிலத்தை விற்கக்கூடாது. என்னுடைய மன உளைச்சலுக்கு திருவண்ணாமலை ஆடிட்டர் தான் பொறுப்பு. நான் செய்யாத குற்றத்திற்காக என்னை பலிகடா ஆக்கி பணத்தை கட்ட சொல்கிறார். இந்த பணம் வேறு ஒருவர் கட்ட வேண்டியது. ஆனால் என்னை பொறுப்பாக்குகிறார் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் தனக்கு கடன் தர வேண்டியவர்கள் விவரத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சாலை மறியல்

இந்த தகவல் அறிந்து கணபதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு கணபதியின் சாவுக்கு காரணமான ஆடிட்டர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். பின்னர் கிருஷ்ணாபுரம் அரும்பாவூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணபதியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் கிருஷ்ணாபுரம்-அரும்பாவூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story