ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே ஆசிரியையை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியை மாயம்
வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி ஆசிரியை. இவர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 18-ந் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பள்ளியில் சென்று விசாரித்தபோது அங்கும் வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் ஆசிரியையின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் ஆசிரியையின் உறவினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென இன்று மாலை, வடக்கு போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.